டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் குற்றவியல் நடவடிக்கை : அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan26 June 2023, 3:21 pm
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாலும், அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவர் கவனித்து வந்த இலாக்காக்களை பிரித்து கொடுக்க திட்டமிடப்பட்டது
அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையை கூடுதலாகவும், அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை கூடுதல் பொறுப்பாகவும் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு, ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் அமைச்சர்களிடம் இலாக்காக்கள் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் அந்த துறைகளை கவனித்து வருகிறார்கள். இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்கிறார்.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர். குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.
டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. மது வகைகள் மீதான ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.
இருப்பினும், குவாட்டர் ஒன்றுக்கு ரூ.10 அதிகமாக கொடுக்க வேண்டும் என்பது டாஸ்மாக் கடைகளில் எழுதப்படாத விதியாகவே உள்ள நிலையில், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கக் கூடாது என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.