அமைச்சர்கள் குறித்து விமர்சனம்… இப்படி இருந்தா கட்சியை எப்படி வளர்ப்பது? திமுக மா.செ ஆடியோ வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2023, 12:59 pm
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்தும் அமைச்சர்களை குறித்தும் கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆடியோவில், ஒரு வீட்டிற்கு பத்து வாசல் இருக்கக் கூடாது. அரசியலில் இவர்தான் முடிவெடுப்பவராக இருக்க வேண்டும். ஜெயலலிதா இருக்கும்போது அவரும் சசிகலாவும் தான் முடிவெடுத்தனர் மூன்றாவது ஆள் தலையிட முடியாது.
எந்த அறிவிப்பாக இருந்தாலும் ஜெயலலிதா பெயரில் தான் வெளியிடபடும். 100 பேரைக் கட்சியை விட்டு நீக்கினாலும் அந்த அறிவிப்பும் ஜெயலலிதாவின் பெயரில்தான் வரும். கண்டவர் எல்லாம் அந்த வீட்டிற்குள் நுழைந்து விட முடியாது. ஆனால் இங்கே அப்படி இல்லை.
அண்ணா நகர் கார்த்திக் அவருடைய வீட்டில் காலையில் 200, 300 பேர் நிற்பார்கள். ஒரு மீட்டிங்கில் இருக்கிறார் என கூறுவார்கள். இவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார். எழுந்திரிக்கவே எட்டு மணிக்கு மேல் ஆகும். பிசினஸ் செய்யும் ஆட்கள் மட்டுமே டெண்டர் விஷயமாக பேசி விடுவார்கள்.
மகேஷ் பொய்யாமொழி திருச்சியிலேயே எங்கிருப்பார் என தெரியாது கட்சிக்காரர்களே கூறுகிறார்கள். ஆனால் நேருவை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் இவரை பார்க்க முடியாது. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும். நடைபெறும் அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோவையில் திமுக வலிமையாக இருக்கிறது என்றால் எனக்கு மேயர் பதவி வேண்டாம் ஆனால் புத்திசாலித்தனமாக இருந்தால் கோவையை ஆண் மேயரிடம் கொடுத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்சி நிற்கும்.
அதற்கேற்ற மாதிரி டீ லிமிடேஷன் செய்திருக்க வேண்டும். கீழே உள்ள 100 கவுன்சிலரை வைத்துக்கொண்டு டெவலப் செய்ய இயலாது. இதனை ஆட்சிக்கு வந்த உடனேயே முதல்வர் ஒப்புக்கொண்டு விட்டார். மாவட்ட செயலாளர் எல்லாம் லிஸ்ட் கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது நேரு தான் அதை மாற்றினார்.
நேரு எப்போதும் நுனிப்புல்லை மட்டும்தான் மேய்ந்து கொண்டே ஓடிக்கொண்டிருப்பார். அவரை செய்யும் முறையாக செய்யவில்லை அவ்வாறு செய்திருந்தால் டீ லிமிடேஷன் முடிந்திருக்கும்.
மேயராக என் மனைவி வரவேண்டும் என்று இல்லை யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் கோவை மாதிரி ஒரு ஊரில் பெண் மேயரை வைத்து கட்சியில் என்ன சாதித்திருக்க முடியும் என கேட்கிறேன்.
ஒரு பெண் மேயர் பத்து எம்எல்ஏக்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் அவ்வாறு பதில் கொடுக்க முடியுமா, சமாளிக்க முடியுமா?. பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் கட்சியை வளர்க்க முடியாது. என அந்த ஆடியோவில் இருந்தது. இது குறித்து நா.கார்த்திக்கிடம் கேட்கையில் நான் இவ்வாறு பேசவில்லை என மறுத்துள்ளார்.