மனைவியை தவறாக பேசியவரை தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம் : மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாப பலி!!
Author: Udayachandran RadhaKrishnan11 November 2022, 4:28 pm
திருப்பூரில் மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கல்லூரி சாலை துவாரகை நகரில் பிரவீன் (வயது 33), தனது மனைவி ராணியுடன் வசித்து வருகிறார். கும்பகோணத்தை சேர்ந்த இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரின் வீட்டின் அருகே குடியிருக்கும் அண்ணாமலை (வயது 40) என்பவர் ராணியை நேற்று முன்தினம் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பிரவீன் மது போதையில் அண்ணாமலை வீட்டின் முன்பு கை, கால்களை உடைத்து விடுவேன் என தகராறு செய்துள்ளார்.
ஆனால் அண்ணாமலை சொந்த ஊருக்கு சென்றிருந்ததால் பூட்டிய வீட்டின் முன்பு கத்தி உள்ளார். இதனை அருகில் இருந்த நபர்கள் அண்ணாமலைக்கு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை நேற்று இரவு திருப்பூருக்கு திரும்பி வந்து மது போதையில் பிரவீன் உடன் தகராறில் ஈடுபட்டார். இதில் தான் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் பிரவீனை அண்ணாமலை குத்தி விட்டு தப்பி ஓடினார்.
அருகில் இருந்த பொதுமக்கள் பிரவீனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.