கோவில் அறங்காவலர் குழு அமைப்பதில் மோதல்… அமைச்சருக்கு எதிராக திரும்பிய திமுக ஒன்றிய செயலாளர்… குழப்பத்தில் தொண்டர்கள்…!!

Author: Babu Lakshmanan
4 October 2023, 9:29 pm

விருத்தாச்சலம் அருகே அறங்காவலர் குழு அமைப்பதில் அமைச்சருக்கு எதிராக திமுக ஒன்றிய செயலாளர் செயல்படுவதாக குற்றம் சாட்டி, அக்கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில், புகழ்பெற்ற செம்பையனர் திருக்கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், நாள்தோறும் முப்பூசை படையல்களும், வருடத்திற்கு ஒருமுறை வேல் முழுகுதல் திருவிழாவும் வெகுவிமர்சையாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவ்வாறு புகழ்பெற்ற இத்திருக்கோயிலில் ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழு அமைப்பதில், திமுகவினருக்கு இடையே உட்கட்சி பூசல் அரங்கேறி வருவதால், திமுகவினரே கடும் அதிருப்தியில் உள்ளனர்.

திமுகவின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஐந்து பேர் கொண்ட திமுகவினரை, அறங்காவலர் குழுவிற்கு பரிந்துரை செய்ததாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட கிராமத்தின் திமுக ஒன்றிய செயலாளராக உள்ள சுரேஷ் என்பவர், அமைச்சர் கொடுத்த பட்டியலில் உள்ள நபர்களை அறங்காவலர் குழுவில் தேர்ந்தெடுக்காமல், தனக்கு சாதகமான திமுகவினரை கோவில் அறங்காவலர் குழுவில் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் திமுகவில் தங்களுக்கு மரியாதை இல்லை எனவும், 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவிற்கு, உழைத்த நாங்கள் திமுகவிலிருந்து வெளியேறப் போவதாகவும், கட்சியில் இத்தனை ஆண்டுகள் உழைத்தும், எந்த நன்மை இல்லை எனவும், அதிருப்தியுடன் முதனை கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், திமுகவை சேர்ந்த குணசேகரன் என்பவர் கூறுகையில், “கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினருக்கு திமுக அமைச்சர் பரிந்துரைத்த நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ் தனக்கென்று ஒரு அணி வைத்துக் கொண்டு புறக்கணிப்பதாகவும், அமைச்சருக்கு எதிராக திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ் செயல்படுவதாக குற்றம்சாட்டுகிறார்.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலில், அறங்காவலர் குழு பதவிக்காக, திமுகவினரே போட்டி போட்டுக் கொள்வதும், குழு தேர்ந்தெடுக்க அமைச்சர் பரிந்துரை செய்வதும், திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ் மதிக்காமல் செயல்படுவது என திமுகவினரே, திமுக ஒன்றிய செயலாளரை
பற்றியும், திமுக கட்சிக்கு உழைத்து எவ்வித பலனும் இல்லை என அடுக்கடுக்காக குற்றம்சாட்டும் நிலைக்கு திராவிட முன்னேற்ற கழகம் சென்று விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அறங்காவலர் குழு பதவிக்காக போட்டி போட்டுக்கொள்ளும் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகளின் பிரச்சனையை, திமுக அமைச்சர் சி.வெ. கணேசன் தீர்த்து வைப்பாரா? அல்லது திமுகவினருக்கு இடையே நடைபெறும் உட்கட்சி பூசலால், கேள்விக்குறியாக உள்ள செம்பையனார் திருக்கோயில் அறங்காவலர் குழு பற்றி தமிழக அரசு கண்டுகொள்ளுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!