காயமடைந்த பெண்ணை ஆம்புலன்ஸுக்குள் புகுந்து தாக்கிய கும்பல் ; கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan7 March 2023, 6:15 pm
கடலூரில் இருதரப்பு மோதலில் காயமடைந்த பெண்ணை சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸில் ஏற்றிய பிறகும், ஒரு தரப்பினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புவனகிரி சாத்தப்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி மகத் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி தீர்த்தவாரி சென்ற சாமி, மீண்டும் ஊர்வலமாக ஊருக்கு திரும்பி இருக்கிறது. அப்போது சாத்தப்பாடி மற்றும் மேலமணக்குடி பகுதியை சேர்ந்தவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் ஊரைச் சேர்ந்தவர்களை தாக்கியவர்கள் மீது கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இரு கிராம மக்களையும் கலைந்து போக செய்தனர்.
இதனிடையே மோதலில் காயமடைந்த பெண் மற்றும் அவரது கணவர், குழந்தைகளை ஆம்புலன்சுக்குள் புகுந்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ஆம்புலன்சில் பெண் உள்பட சிலர் அமைந்துள்ளனர். திடீரென முகத்தில் துணி கட்டிய நபர் ஒருவர் வேகமாக ஏறி சரமாரியாக பெண் உள்பட சிலரை தாக்கினர். அதனை தொடர்ந்து மேலும் சிலர் ஆம்புலன்சுக்குள் ஏறி வந்து சரமாரியாக தாக்குகின்றனர். இந்த வீடியோ வெளியான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.