‘தையல் போட ரூ.200 கொடு’… அரசு மருத்துவமனையில் மதுபோதையில் ஊழியர் ரகளை : வீடியோ எடுத்தவரை தாக்கிய பெண் போலீஸ்!
Author: Babu Lakshmanan30 December 2022, 10:02 pm
கடலூர் : சிதம்பரம் அரசு காமராஜர் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த நபர் தையல் போடுவதற்கு லஞ்சம் கேட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது அரசு காமராஜர் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் மருத்துவமனைக்கு வந்து செல்வது வழக்கம்.
நேற்று இரவு கோவிந்தசாமி தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவரது தாயார் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்பு தலையில் தையல் போட சொன்னதாக தெரிகிறது. மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் செய்யக்கூடிய பணிகளை அங்கு பணிபுரியும் சாதாரண ஊழியரை மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு தையல் போட சொல்வது தொடர்ந்து பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர் மணிமாறன் என்பவர் நேற்று கட்டு கட்டும் இடத்தில் மது போதையில் இருந்துள்ளார். அப்போது கார்த்திக் அவரது தாயாரை அழைத்து சென்று உள்ளார். மது போதையில் இருந்த ஊழியர் மணிமாறன் 200 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்திக், எதற்கு அரசு மருத்துவமனைக்கு நாங்கள் வருகிறோம், எதற்காக நாங்கள் தையல் போடுவதற்கு லஞ்சம் தர வேண்டும்..?, ஏன் 200 ரூபாய் கேட்டீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் கடுப்பான அந்த ஊழியர், வைத்தியம் பார்க்க வேண்டுமா..? வேண்டாமா என்று மதுபோதையில் மணிமாறன் பேசும் காட்சியும், 200 ரூபாய் இல்லையென்றால் 5000 ரூபாய் கொடு என்று அலப்பறை செய்த காட்சியையும் கார்த்திக் அவரது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனிடைய, ஊழியர் மதுபோதையில் ரகளை செய்வதை பார்த்துக் கொண்டிருந்த பெண் போலீஸ்காரர் ஒருவர், வீடியோ எடுத்த கார்த்திக்கை தாக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. இது தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.