பாலக் கட்டுமானத்தால் தடைபட்ட வெள்ளம்… 700 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய அவலம் ; அதிகாரிகளின் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
12 November 2022, 2:34 pm

விருத்தாச்சலம் அருகே 30 கிராமத்தின் வடிகால் வாய்க்காலாக உள்ள, மாரி ஓடை தூர்வாராமல், அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால், சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட, குறுவை சாகுபடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விருத்தாச்சலம் அடுத்த கவனை, சித்தேரிக்குப்பம், மாத்தூர், கட்டிய நல்லூர், பவழங்குடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களின் இருந்து, வெளியேறக்கூடிய மழை நீரானது, மாரி ஓடை வழியாக வயலூர் ஏரிக்கு சென்று, பின்பு மணிமுத்தாற்றில் கலப்பது வழக்கமாகும்.

ஆனால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், 30 கிராமங்களின் வடிகால் வாய்க்காலாக உள்ள, மாரி ஓடையை தூர்வாராததால், மாத்தூர், சித்தேரிகுப்பம், கவனை உள்ளிட்ட கிராமங்களில், மாரி ஓடையின் அருகாமையில் உள்ள, சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட, குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்த, நெற்பயிர்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி அழுகுவதால், விவசாயிகள் செய்வது தெரியாமல் திகைத்து வருகின்றனர்.

குருவை சாகுபடி செய்து 45 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், தற்போது பூ பூக்கின்ற பருவம் தொடங்கியுள்ளதால், கனமழை காரணமாக மாரி ஓடையில், ஏற்பட்ட வெள்ள பெருக்கானது, வெளியே செல்ல முடியாமல், விவசாய நிலத்திற்குள் புகுந்து விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பல்வேறு இன்னலுக்கு இடையில், கடனை வாங்கி விவசாயம் செய்தால், அதிகாரிகளின் அலட்சியத்தால், தற்போது தங்களது வாழ்வாதாரம் அழிந்து கொண்டிருப்பதாகவும், மாரி ஓடை செல்கின்ற வழியில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாலம் கட்டும் பணிக்காக, ஓடை தடுக்கப்பட்டதால், வெள்ளம் வடியாமல், விவசாய நிலத்திற்குள் இடுப்பளவிற்கு தேங்கி நிற்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து, விவசாய நிலத்திற்குள் தேங்கி நிற்கும் வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தால், மட்டுமே, விவசாயிகளின் வாழ்வாதாரம் மீண்டு எழும் என்றும், அவ்வாறு செய்யாமல் அலட்சியப்படுத்தினால், விவசாயிகள் செய்த குருவை சாகுபடி நெற்பயிர்கள், அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழிந்து விடும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் நிலையை வேளாண் துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை எனவும், நீரில் மூழ்கிய நெற்பயிர்களை, நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

  • kalakalappu 3 movie update குஷ்பூவுடன் கை கோர்த்த பிரபல தொழில் அதிபர்…கலகலப்புக்கு இனி பஞ்சமில்லை..!
  • Views: - 385

    0

    0