பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்… பதுக்கி வைத்த தலைமை காவலர்.. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவு…!!
Author: Babu Lakshmanan1 January 2024, 7:59 pm
கடலூர் அருகே புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள், சாராயப் பாக்கெட்டுகளை மறைத்து வைத்த தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து இன்று 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு, புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. புதுச்சேரியில் இருந்து வருபவர்கள் அனுமதியின்றி மது பாட்டில்கள், சாராயப் பாக்கட்டுகளை கொண்டு வருகின்றனரா..? என கடலூர் மாவட்ட காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆல்பேட்டை சோதனை சாவடியில் புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு. கடலூர் மதுவிலக்கு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
காவல் துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் இருசக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள், கார்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் காவல் துறையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஆல் பேட்டை சோதனைச் சாவடியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் நேற்று சோதனை நடைபெற்றது இதில் தலைமை காவலர் செல்வம் கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை மறைத்து வைத்ததாக எழுந்த புகாரின் பேரில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.