எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது.. மீண்டும் அதிமுக – பாஜக மோதல்!
Author: Hariharasudhan24 December 2024, 1:26 pm
எம்.ஜி.ஆரை மோடி உடன் ஒப்பிட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 37ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. இந்த நிலையில், அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எம்.ஜி.ஆருக்கு நினைவேந்தலைச் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “தலைசிறந்த தேசியவாதியான டாக்டர் எம்.ஜி.ஆர். மீது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, மிகுந்த மரியாதை இருக்கிறது. அதனை வெளிப்படுத்த அவர் தயங்கியது இல்லை.
அமரர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவின் போது, அவரது உருவம் பொறித்த ரூ.100/- நாணயம் வெளியிட்டதோடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தியதும், பிரதமர் மோடி தான்.
டாக்டர் எம்.ஜி.ஆர்க்கும், பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே, பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தங்கள் நேர்மையாலும், கடின உழைப்பாலும், பொதுமக்கள் மீது கொண்ட அன்பாலும், உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள்.
தாங்கள் பட்ட துயரங்கள், வருங்கால சந்ததியினருக்கும் வரக் கூடாது என்பதற்காக, தங்கள் அதிகாரத்தை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியவர்கள். அமரர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் உள்ள, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்.
பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். டாக்டர் எம்.ஜி.ஆரின் உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று நமது பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார் என்பது பெருமைக்குரியது.
புகழ் பெற்ற சில தலைவர்களின் வாழ்க்கை, எந்த மறைமுக சூத்திரத்தையும் கொண்டிருப்பதில்லை. பொதுமக்களின் மீது கொண்ட அன்பு, சமூகத்தின் மீது கொண்ட அக்கறை என்ற ஒரே கலவைதான். அந்த வகையில், ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை, ஒரு சகாப்தம்” என அறிக்கை மூலம் நினைவுநாளில் அனுசரித்து இருந்தார்.
இதையும் படிங்க: இளம்பெண்களுக்கு ஃப்ரீ.. ராமேஸ்வரம் உடை மாற்றும் அறையில் அமேசான் ஆர்டரைக் கண்டுபிடித்த ஐடி பெண்!
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எம்ஜிஆரைப் பொறுத்தளவில் அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. எம்ஜிஆர் சாதி, சமய வேறுபாடுகளைப் பார்த்ததில்லை. எல்லோரும் போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர். சாதி,மதம், இனத்தைக் கடந்து சமத்துவம் பார்க்கும் இயக்கம் அதிமுக. எந்த நிலையிலும், எம்ஜிஆர் உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி நீடித்தது. பின்னர், அதிமுக முன்னாள் தலைவர்கள் ஜெயலலிதா, திராவிடர் கழகங்களின் தலைவர் அண்ணாதுரை ஆகியோர் குறித்தான பாஜக முக்கிய பிரமுகர்களின் பேச்சால் பாஜக உடன் இனி கூட்டணி இல்லை தற்போது வரை தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.