மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? – திமுக அமைச்சருக்கு ஜெயக்குமார் சரமாரி கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2025, 6:11 pm

சென்னை: இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மத்திய அரசுக்கு கொத்தடிமையாக திமுக அரசு உள்ளது. மாநில உரிமையை யார் தாரைவார்த்தது என நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா? கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

நான்கு ஆண்டுகளில் திமுக அரசு 4 கோடியே 18 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளது. உரிமைகளை மத்திய அரசிடம் தாரைவார்த்தது திமுக தான். மத்தியில் ஆட்சியில் இருந்தபோதே திமுக, கல்வியை மாநிலப் பட்டியலுக்குள் கொண்டு வந்திருக்கலாம். மத்திய அரசுக்கு சொம்பு தூக்கவும், ஒத்து ஊதவும் திமுக செயல்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி விடுத்த சவாலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.

எங்கள் முதலமைச்சருக்கு எல்லாம் தெரியும் என சொல்பவர்கள், ஏன் விவாதத்திற்கு வர மறுக்கிறார்கள்? அமைச்சர் ரகுபதிக்கு மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார்? கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு, இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது.

கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்தது முதல், இன்றைக்கு கொல்லைப்புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவுக்கு அதிமுக பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா?

மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தவர் தானே நீங்கள்? நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணி தானே? அதே கூட்டணியே சேர்ந்தவர்களை வைத்து உச்சநீதிமன்றம் வரை சென்று நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள் ?

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து, பல்வேறு சதிச்செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்? 3வது மாடியில் CBI ரெய்டு நடக்க, முதல் மாடியில் முன்று மடங்கு சீட்களை கொடுத்து காலில் விழுந்த கொத்தடிமைகள் தானே நீங்கள்?

ஆனால், பாஜக-வுடன் கூட்டணியில் இருந்த போதும், 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம், என்ற அறிவிப்பு என தமிழ்நாட்டின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்காண ஆட்சி செய்து, தமிழ்நாட்டை காத்திட்ட இயக்கம் தான் அஇஅதிமுக.

மத்திய அரசின் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் அன்று தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஒரே காரணம், 10 ஆண்டு காலம் அதிமுக நடத்திய மக்களுக்கான ஆட்சி; உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது எங்கள் “தமிழ்நாடு மாடல்” ஆட்சி! ஆனால், ஒன்றிற்கும் உதவாத, உருப்படாத ஒரு வெற்று மாடல் அரசை நடத்தி கொண்டு, தனக்குத் தானே கையைத் தட்டிக்கொண்டு, பொம்மை ஆட்சி நடத்தும் நீங்கள், மக்களை பொறுத்த வரை வெறும் விளம்பர மாடல் தான்

D Jayakumar strongly criticize DMK Govt in Education issues

அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரவசனம் பேசுகிறீர்கள்? எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன்- உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா? அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா? எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்! பாத்துக்கலாம்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, “நாங்கள் எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கிப் போவதுமில்லை, அடமானம் வைப்பதும் இல்லை. இந்தியாவிலேயே டெல்லிக்கு எதிராக முதல் குரல் எழுப்புவது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான். டெல்லியில் அடமானம் வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

எங்களுக்கு சொந்த புத்தி உண்டு. சொந்தக் கால்களில் நிற்கும் சக்தியும் உண்டு. சொந்த மண்ணைக் காப்பாற்றும் திறமையும் எங்களுக்கு உண்டு. நாங்கள் செய்த சாதனையை பட்டியல் போட்டு சொல்கிறோம். அதில் என்ன பொய் என்று அவர் கூறட்டும். அதற்குப் பிறகு விவாத மேடையை வைத்துக் கொள்வோம்” எனக் கூறியிருந்தார்.

  • Vijay TV celebrity diagnosed with rare disease… Slim body photo goes viral விஜய் டிவி பிரபலத்துக்கு அரிய வகை நோய்… உடல் மெலிந்த போடோ வைரல் : நடிகை கண்ணீர்!
  • Close menu