போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டெட் ஆசிரியர்களுக்கு காவல்துறை கெடு… கைவிட முடியாது என விடாப்பிடியில் ஆசிரியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2023, 7:48 pm

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டெட் ஆசிரியர்களுக்கு காவல்துறை கெடு… கைவிட முடியாது என விடாப்பிடியில் ஆசிரியர்கள்!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை(DPI) வளாகத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் என மூன்றுவகையான ஆசியர்கள் சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் குடும்பத்தினருடன் போராடி வருகின்றனர்.

குறிப்பாக, இடைநிலை பதிவு ஆசிரியர்களைப் பொறுத்தவரையில், `ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும்’ எனக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதேபோல, பகுதி நேர சிறப்பாசிரியர்களைப் பொறுத்தவரையில், `திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்’ எனக்கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர, ஆசிரியர் தகுதி தேர்வு (TET) முடித்தவர்களைப் பொறுத்தவரையில், “கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எனும் TET தேர்வு கொண்டுவந்தார்கள், இதில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியராக முடியும் என்றார்கள். அதன்படி, 2013, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் பி.எட் முடித்த நாங்கள் 30,000 பேர் தேர்ச்சி பெற்றோம். ஆனால், தேர்ச்சி பெற்றும் எங்களுக்குப் பணிநியமன ஆனை வழங்கவில்லை. மாறாக டெட் எழுதியவர்கள் இன்னொரு போட்டித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால்தான் வேலை எனக்கூறி தமிழ்நாடு அரசு கடந்த 2019-ம் ஆண்டு அரசணையும் வெளியிட்டுவிட்டது. அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும், உடனடியாக எங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்!” என்பதுதான் எங்கள் கோரிக்கை என்கின்றனர்.

ஒரு வார காலமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், 200-க்கும் மேற்பட்ட போராடும் ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை. அதே போல அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்திய போதும் வாபஸ் பெற ஆசிரியர்கள் முன்வரவில்லை.

அவர்கள் சொல்லும் காரணம், பலகட்டமாக நாங்கள் போராட்டம் நடத்தியும், நீங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கூறுகின்றனர். ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் இந்த முறை பேச்சுவார்த்தை நம்பி பிரயோஜனம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் போராட்டத்தில ஈடுபட்டு வரும் டெட் ஆசிரியர்களுக்கு இரவு 8 மணி வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்களத்திற்கு நேரில் சென்ற திருவல்லிக்கேணி காவல்துணை ஆணையர் சேகர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், போராட்டம் செய்வதற்கான இடம் இது இல்லை, ஒரு போராட்டம் காலை தொடங்கி மாலையில் முடிய வேண்டும், ஆனால் நீங்கள் 6 நாட்களாக போராடி வருகிறீர்கள், நீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் 8 மணி வரை மட்டுமே உங்களுக்கு நேரம் தருகிறோம், அதற்குள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் டெட் ஆசிரியர்கள், இது பள்ளிக்கல்வித்துறை வளாகம் என்பதால் எங்களுக்கு போராட உரிமை உண்டு, இது அறவழிப்போராட்டம் என்றும் மீறி கைது செய்தால் செய்யுங்கள் என தெரிவித்துள்ளனர்.

  • Saindhavi GV Prakash emotional moment மீண்டும் ஒரே மேடை..ஜிவி பிரகாஷை பாராட்டிய சைந்தவி…!
  • Views: - 447

    0

    0