ஓபிஎஸ் மகனுக்கு 9 நாள் கெடு… பூதாகரமாகும் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் : தேனி எம்பி ரவீந்திரநாத்துக்கு வனத்துறை நோட்டீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2022, 4:14 pm

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி எம்.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராகுமாறு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேனி மாவட்டம் கைலாசப்பட்டி அருகே உள்ள கோம்பை என்னும் பகுதியில் உள்ள தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த சோலார் மின்வேலியில் சிக்கி சிறுத்தை மர்மமான உயிரிழந்ததாக,புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அதன் பின்னர் மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்திடம் தோட்ட மேலாளர்களாக பணிபுரியும் தங்கவேல், மற்றும் ராஜவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விவசாயி அலெக்ஸ் பாண்டியனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தோட்ட உரிமையாளரான தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பாக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையிலான திமுகவினர் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வன அலுவலரிடம் புகார் அளித்தனர்.

அந்த நிலத்தின் உரிமையாளர்களாக மூன்று பேர் உள்ளனர். அதில் தேனி மக்களவை உறுப்பினராக ரவீந்திரநாத் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால்,நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும், அதற்காக சபாநாயகரிடம் அனுமதி கேட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு வனத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் சமர்த்தாவிடம் கேட்டபோது, மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மை இல்லை. நிலத்தின் உரிமையாளர் என்ற முறையில் அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

அதற்காக அவர் வரும் அக்டோபர் 24 முதல் நவம்பர் 1 வரை உள்ள காலகட்டத்தில் ஏதாவது ஒரு நாள், அவர் நேரில் ஆஜராகி அவரது கருத்தை தெரிவிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் என்பது சரியல்ல என்று தெரிவித்தார்.

சிறுத்தை உயிரிழந்த உபகாரத்தில் தேனி மக்களவை உறுப்பினருக்கு வனத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Kalaipuli S. Thanu updates on Vaadivaasal வாடி வாசலை திறந்து விட்ட எஸ்.தாணு…சீறிப்பாயுமா வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி…!