உயரும் பலி எண்ணிக்கை.. குடிநீரில் கழிவுநீரா? பல்லாவரத்தில் நிலவும் பதற்றம்!
Author: Hariharasudhan5 December 2024, 12:43 pm
சென்னை, பல்லாவரத்தில் உடல் உபாதைகள் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கு கழிவு நீரில் குடிநீர் கலந்ததே காரணம் என மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
சென்னை: சென்னை அடுத்த, பல்லாவரம் அருகே உள்ள மலைமேடு மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும் மக்கள் நேற்று (டிச.4) வழக்கம் போல் வந்த தண்ணீரை அருந்தியதாகத் தெரிகிறது. அதன் பின்னர், அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் உள்ளிட்ட உடல் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையில் என மொத்தம் 30 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் 8 ஆண்கள், 15 பெண்கள் உட்பட மொத்தம் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேருக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாகவும் மருத்துவமனை மற்றும் உறவினர் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், இதில் திருவேதி என்பவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மோகன்ராஜ் என்பவர் தற்போது உயிரிழந்துள்ளார். இவ்வாறு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்ததால், அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் கூடி குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘நகையைத் திருடினியா திருட்டு****..’ சிறுமியை தனியாக மிரட்டிய எஸ்ஐ? பெற்றோர் பரபரப்பு புகார்!
இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே, இந்தச் சம்பவத்தை அறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்தச் சம்பவத்திற்கு குடிநீர் காரணம் இல்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்ட மீனால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகள் மாதிரி நீரைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.