போலீஸ் ஸ்டேஷன் அருகே அழுகிய நிலையில் சடலம்.. சொகுசு காரில் நடந்தது என்ன?
Author: Hariharasudhan2 December 2024, 5:47 pm
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையல் அருகே காரில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள ராஜகோபால் தெரு பகுதியில், விலை உயர்ந்த (BMW) கார் ஒன்று நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து உள்ளது. இந்த நிலையில், இந்த காரில் இன்று (டிச.2) அதிகாலை துர்நாற்றம் வீசி உள்ளது.
இதனால், அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்களில் சிலர், காரில் இருந்து துர்நாற்றம் அதிக அளவில் வருவதைக் கண்டு, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உள்ளனர். இந்த தவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீசார், காரை திறந்து பார்த்தனர்.
அப்போது, காரினுள் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்து உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து, காருக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சடலம் கண்டெடுக்கப்பட்ட கார் புதுச்சேரி பதிவு எண் கொண்டது என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அந்தக் கார் எப்போது இருந்து அங்கு நின்றது? உயிரிழந்த நபர் மதுபோதையில் உள்ளே படுத்திருந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உள்ளே வீசிவிட்டுச் சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவ மாணவியின் உயிரை பறித்த புரோட்டா : கோவையில் சோகம்!
அதேநேரம், மீட்கப்பட்ட நபர் உயிரிழந்து 10 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.