வனத்துறையினரின் அலட்சியத்தால் பறிபோன மானின் உயிர் ; கயிறு கட்டி பிடிக்கும் போது நேர்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
28 November 2022, 3:53 pm

தூத்துக்குடி ; திருச்செந்தூர் அருகே உடன்குடி வணிக வளாகத்தில் புகுந்த மானை கழுத்தியில் கயிறு கட்டி வனத்துறையினர் பிடித்த போது, கயிறு இறுகியதில் மான் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி கீழ பஜாரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மிளா என்னும் வகையைச் சேர்ந்த மான் ஒன்று நேற்று இரவு புகுந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்த வியாபாரிகள் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 3 மணி நேரம் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மிளாவை மீட்டு செல்வதற்கு போதிய உபகரணங்கள் கொண்டு வராததால் திருச்செந்தூர் தீயணைப்பு துறையினரிடம் கயிறு வாங்கினர்.

பின்னர் அந்த கயிற்றில் சுருக்கு வைத்து மிளா கழுத்தில் மாட்டி பிடிக்க முயன்றனர். அப்போது, மிளா பயத்தில் அங்கும் இங்கும் ஓட முயன்றது. இதில், கழுத்தில் கயிறு இறுகியதில் மிளா மயங்கியது. பின்னர், மிளாவை வனத்துறையினர் மீட்டு திருச்செந்தூர் வன சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மிளா கயிறு இறுகியதில் இறந்ததாக கூறப்படுகிறது.

வனத்துறையினர் மிளாவை பிடிப்பதற்கு எந்த ஒரு உபகரணமும் கொண்டு வராமல் கயிறு மூலம் பிடித்ததில் கழுத்து இறுகி மூச்சுத்திணறி இறந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து திருச்செந்தூர் வனசரக அலுவலர் கனிமொழியிடம் கேட்டபோது, மிளா ஒரு மான் வகையைச் சேர்ந்தது. இது பொதுமக்களும் மற்றும் மற்ற விலங்கினங்களை பார்த்தால் மிரண்டு ஓடக்கூடியதாகும். இதனால் அது மிரண்டு பயந்த நிலையில் இருந்தது. இன்று அந்த மிளா இறந்து விட்டது. பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்ய உள்ளோம், என தெரிவித்தார்.

தற்போது வனத்துறையினர் கயிறு மூலம் மிளாவை பிடித்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Rajini Talk About Jailer 2 கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!
  • Close menu