முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு : இந்துக்களுக்கு எதிராக திமுக உள்ளதாக கூறி வீடியோ வெளியிட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan16 March 2022, 4:38 pm
கன்னியாகுமரி : தமிழக முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பதிவிட்ட புகாரில் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட சூழால் சங்குருட்டி பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(வயது 45 ). இவர் முன்னாள் ராணுவ வீரர்.
தற்பொழுது தென்காசி மாவட்டம் ஆதிதிராவிட நலத் துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் திராவிட இயக்கத் தலைவர்களான கருணாநிதி, எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் வீரமணி உட்பட பல்வேறு திராவிட இயக்கத் தலைவர்களை மிக அருவருக்கத்தக்க வகையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இவர் இதுபோன்று பல வீடியோக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் மோதலை உருவாக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூராக பதிவிட்ட ஓட்டுநர் சஜிகுமார் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசியில் இருந்த அவரை கைது செய்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்