‘அமைச்சராக இருந்துட்டு இப்படி பண்ணலாமா’..? சாதி கலவரம் ஏற்பட வாய்ப்பு… மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி மனு!!
Author: Babu Lakshmanan27 ஜூன் 2023, 4:46 மணி
தேனி மாவட்டத்தில் மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி நேதாஜி ஃபார்வேர்ட் பிளாக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேல், பஹத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் வடிவேல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பியுள்ளன. மாமன்னன் படம் உருவாக காரணம் தேவர் மகன் தான் என்றும், ‛தேவர் மகன்’ பார்க்கும்போது எனக்கு வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்துமே ஏற்பட்டதாகக் கூறினார்.
மேலும், ‘தேவர் மகன்’ உலகில் பெரிய தேவர் இருக்கிறார், சின்ன தேவர் இருப்பதாகவும், அதில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி முடிவு செய்து என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் ‘மாமன்னன்’ எனக் கூறிய அவர், வடிவேலு நடித்த அந்த இசக்கி கதாபாத்திரம்தான் ‘மாமன்னன்’ என கூறியிருந்தார்.
இயக்குனர் மாரி செல்வராஜுன் இந்த பேச்சு கடும் எதிர்ப்புகளை கிளம்பச் செய்துள்ளது. குறிப்பாக, ‛தேவர் மகன்’ குறித்த மாரி செல்வராஜுன் இந்த கருத்து பெரும் விவாத பொருளாகவே மாறியுள்ளது. இந்நிலையில் தான் இயக்குனர் மாரி செல்வராஜ் மீது போலீசில் அடுத்தடுத்து புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி நேதாஜி ஃபார்வேர்ட் பிளாக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும், படம் திரையிட்டு வெளியிடப்பட்டால் மீண்டும் ஜாதி கலவரம் ஏற்படும் என அந்த மனுவில் ஃபார்வேர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே தென் தமிழக முழுவதும் ஜாதி கலவரம் வராமல் தடுப்பதற்கு மாமன்னர் படத்தை தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
0
0