சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை: தொடர் கனமழையினால் வனத்துறை அறிவிப்பு…!!
Author: Rajesh13 April 2022, 4:39 pm
விருதுநகர்: தொடர் மழையின் காரணமாக சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் மதுரை-விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு உள்ள சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிரதோஷம், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
அதையொட்டியுள்ள 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதிக்கப்படுவர். இந்தநிலையில், பெய்து வரும் தொடர் மழை காரணமாக சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் இன்று தடை விதித்துள்ளனர்.
மழை நின்று இயல்பு நிலைக்கு வந்த பின் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18ம் தேதி வரை பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் மழை காரணமாக தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.