போர்க்களமாக மாறிய கோவில் வளாகம் : பழனியில் பரபரப்பு.. இருதரப்பு பக்தர்கள் மோதலால் பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 4:47 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29ம்தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று கோவை மற்றும் எடப்பாடி ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்திருந்தனர்.

பழனி திருஆவினன்குடி கோவிலுக்கு எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய சென்றபோது, அங்குள்ள கோவில் நுழைவாயிலில் நின்று கோவையை சேர்ந்த பக்தர்கள் சிலர் மேளம் அடித்து கொண்டிருந்தனர்.

அப்போது எடப்பாடியை சேர்ந்த காவடி பக்தர்களும் மேளம் அடித்துக்கொண்டே வந்தனர். இதையடுத்து இடைப்பாடி பக்தர்களை மேளம் அடிக்கக்கூடாது என்று கோவை பக்தர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.

ஆனால் மேளம் அடிப்பதை நிறுத்தாமல் எடப்பாடி பக்தர்கள் தொடர்ந்து மேளம் அடித்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் தகராறு ஏற்பட்டு கோவையை சேர்ந்த பக்தர்களை கோவிலில் இருந்து வெளியேற்றி கோவில் நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டை எடப்பாடி பக்தர்கள் பூட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோவை பக்தர்கள் அப்பகுதியில் இருந்த கடைகளில் இருந்த தேங்காய், கற்கள் மற்றும் கட்டைகள் ஆகியவற்றை கொண்டு தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து திரு ஆவினன்குடி கோவிலுக்கு வந்த அடிவாரம் போலீசார் கோவில்‌ முன்பு தகராறில் ஈடுபட்ட பக்தர்களை விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து காயமடைந்த எடப்பாடி பக்தர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி கோவிலில் இருதரப்பு பக்தர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Impact of PART2 MOVIES on Theater Ownersஇனி பார்ட்-2 படமே வேண்டாம்…கதி கலங்கிய தியேட்டர் ஓனர்கள்..!
  • Views: - 542

    0

    0