தைப்பூசத்தை முன்னிட்டு சூரிய தரிசனத்தை பார்க்க பழனியில் குவிந்த பக்தர்கள் : அரோகரா கோஷத்துடன் வழிபாடு!
Author: Udayachandran RadhaKrishnan25 January 2024, 8:23 am
தைப்பூசத்தை முன்னிட்டு சூரிய தரிசனத்தை பார்க்க பழனியில் குவிந்த பக்தர்கள் : அரோகரா கோஷத்துடன் வழிபாடு!
பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பழனிக்கு பாதயாத்திரை ஆக வந்த வண்ணம் உள்ளனர்.
மலை அடிவாரத்தில் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி உற்சாகமாக தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
தைப்பூச திருவிழாவான இன்று அதிகாலை சண்முக நதி இடும்பன்குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரிய பகவானை வணங்கியும் , கைகளில் சூடம் ஏற்றியும் அரோகரா, அரோகரா என்ற கோசத்துடன் வழிபட்டு வருகின்றனர்
மேலும் ஆண்களும் பெண்களும் முருகன் பக்தி பாடல்களை பாடியபடி கிரிவலம் வந்து மலை மீது சாமி தரிசனம் செய்யச் செல்கின்றன. பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதா சாமி தரிசனத்திற்கு மலை மீது செல்லக்கூடிய பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டிருக்கிறது.
பக்தர்களின் கூட்டத்தை போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி பிரித்து பிரித்து அனுப்பி வைக்கின்றனர். யானை பாதை வழியாக தரிசனத்திற்கு பக்தர்கள் மலை மேலே அனுமதிக்கப்பட்டு, தரிசனம் முடித்த பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்கிச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.
மலை மீது பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் மூன்று முதல் நான்கு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் மாலையில் நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் ஆங்காங்கே காத்திருக்கின்றனர்.
திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம், செய்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 3000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பழனிக்கு பாதயாத்திரை ஆக வந்த பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்காக பழனியில் இருந்து தமிழகம் முழுவதும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது