பழனியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்… அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தி பாடல்கள் பாடி வேண்டுதல்…!!
Author: Babu Lakshmanan27 January 2024, 1:35 pm
பழனியில் தைப்பூச திருவிழா முன்னிட்டு ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும், பக்தி பாடல்கள் பாடியபடி கிரிவல பாதையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.
தைப்பூசத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் ஒரு பகுதியாக, கடந்த 25ஆம் தேதி பூச நட்சத்திரத்தில் தைப்பூச திருவிழாவின் தேரோட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அழகு குத்தியும் முருகன் பக்தி பாடலை பாடியும், கிரிவலப் பாதையில் குவிந்து வருகின்றனர்.
மேலும், நாளை மாலை தெப்பக்குளத்தில் தெப்ப தேரோட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.