சினிமாவில் நடிக்கத் தெரிந்தவர்… வாழ்க்கையில் பொய்யாக கூட நடிக்கத் தெரியாதவர் : விஜயகாந்த் மறைவுக்கு தருமபுரம் ஆதீனம் இரங்கல்

Author: Babu Lakshmanan
28 December 2023, 11:39 am

சினிமாவில் நடிக்க தெரிந்தவர் வாழ்க்கையில் பொய்யாக கூட நடிக்க தெரியாதவர் என்று நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு தருமபுரம் ஆதீனம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நடிகரும், தேமுதிக தலைவர் ஆன திரு விஜயகாந்த் அவர்களுக்கு தருமபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஆன்மீகம் கொண்ட அரசியல்வாதியும், நடிகரும் ஆன விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மரணம் சம்பவித்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தோம். அரசியலில் நேர்மையும், ஆன்மீக பணிவும், சமுதாயத்தின் மீது இரக்க சிந்தனையும், மாற்றாரை மதிக்கும் பணிவும் கொண்ட தூய்மையான அரசியல்வாதியை முன்னாள் எதிர்கட்சித் தலைவரை சினிமாவில் நடிக்க மட்டுமே அறிந்தவர். வாழ்வில் பொய்மையாகக்கூட நடிக்கத் தெரியாத உத்தமர்.

ஆன்மீகத்தை வாழ்வில் இணைத்தே காரியம் இயற்றும் மாமனிதப்புனிதரை தமிழகம் இழந்துவிட்டதே. நாம் மதுரையில் இருந்த காலத்தில் அவருடைய தந்தையாருடனாய தொடர்பும், அதுபோது விஜகாந்துடனாய தொடர்பு சமீபத்தில் நம்மை சந்தித்து ஆசிபெற்ற பிரேமலதா வரை குடும்பமே நம்மோடு தொடர்புடையது.

நம் ஆதீன பட்டிணப்பிரவேச பிரச்சனையின் போது முதலாவதாக அறிக்கை கொடுத்து பக்கபலமாக நிகழ்வுக்கு கட்சித் தொண்டர்களை அனுப்பி வைத்தவர். தமிழகம் நேர்மையான அரசியல்வாதியை இழந்தது. சமுதாயத்தின் இதயம் துடிப்பை நிறுத்திக்கொண்டது. ஆன்மீகம் அக்கறையுள்ளோரை தவிர்க்கவிட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆறுதலை தெரிவிக்கிறோம். ஆன்மா இறையடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!