ஆபாச படத்தை லீக் பண்ணட்டுமா..? தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் ; சிக்கும் பாஜக, திமுகவின் முக்கிய நிர்வாகிகள்…!!!

Author: Babu Lakshmanan
29 February 2024, 4:31 pm

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பாஜக மற்றும் திமுக கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தருமபுரம் ஆதின மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். இவரை பணம் கேட்டு மிரட்டியதாக மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மீது ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி புகார் அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் மற்றும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர், ஆதீனத்தின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், அதனை தனியார் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க பணத்தை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி, தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், தங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவர் தொடர்பு கொள்வார் என்றும், செம்பனார்கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பாஜகவின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் மற்றும் செம்பனார்கோயில் திமுக ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்ததாகவும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மடாதிபதி தரப்பில் அளிக்கப்பட்ட புகார் உண்மை என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,
வினோத், ரவுடி விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அரசியலில் எதிரும், புதிருமாக இருக்கும் பாஜக, திமுக, இந்தக் குற்றச்செயல்களில் கூட்டணி போட்டு ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடையே முனுமுனுக்கச் செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் அகோரம், கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…