வீடு முழுவதும் மிளகாய் பொடி… வடிவேலு பாணியில் ரூ.28 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் ; போலீசார் விசாரணை..!!
Author: Babu Lakshmanan15 July 2023, 2:43 pm
தர்மபுரி : அரூர் அருகே தொடர் திருட்டு – வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 28 லட்சம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அச்சல்வாடி கிராமத்தில் குமரேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். கீரைப்பட்டி கிராமத்தில் தன்னுடைய சகோதரிக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பு விற்பனை செய்துள்ளனர்.
அதற்கு முன் பணமாக ரூபாய் 25 லட்சம் பெற்றத் தொகையும், மாடு விற்பனை செய்த ரூபாய் 3 லட்சம் என மொத்தம் 28 லட்சமும், ஒன்பது பவுன் தங்க நகைகளையும் பீரோவில் வைத்துள்ளனர்.
இந்த நிலையி,ல் நேற்று இரவு குமரேசன் மற்றும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு, தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின்பு, தனது வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகவும், உள்ளே சென்று பார்க்கும் பொழுது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
கணவன், மனைவியும் உறவினர் வீட்டுக்கு சென்றதை பயன்படுத்திக் கொண்டு, நோட்டமிட்டு இருந்த மர்ம நபர்கள் பூட்டிக் கிடந்த பூட்டை உடைத்து வீட்டினுள் பணம் மற்றும் தங்க நகைகளையும் திருடி சென்றுள்ளனர். அப்போது, தடயங்கள் எதுவும் கிடைக்கப் பெறாத வகையில், மிளகாய் பொடியை வீட்டில் பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் தூவி சென்றுள்ளனர்.
இதே பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடி சம்பவம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக அரூர் வட்டாரத்தில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் ஒரு மன குழப்பத்தையும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் ஏற்படுத்தியுள்ளது.