மேல்தளத்தில் ஓட்டை போட்டு உள்ளே இறங்கிய திருடன்… அடுத்தடுத்து நான்கு கடைகளில் கைவரிசை ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி…!!!

Author: Babu Lakshmanan
17 February 2024, 9:50 am

தர்மபுரி மாவட்டம் நகர பகுதியில் அடுத்தடுத்த நான்கு கடைகளின் பூட்டை உடைத்து 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரியில் நகர பகுதியில் சாலை விநாயகர் ரோடு பகுதியில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நள்ளிரவில் ஒரு மருந்தகம், இரண்டு பாத்திர கடைகள் மற்றும் ஒரு ஆட்டோ மொபைல் கடை என நான்கு கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று காலை கடைகளில் கல்லா பெட்டிகள் திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைகளின் உரிமையாளர்கள் பூட்டிய கடைகளுக்குள் எப்படி பணம் திருடுபோனது என அதிர்சியில் இருந்த கடை உரிமையாளர்கள் தேடி பார்த்த பொழுது மேற்கூரைகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கடை உரிமையாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடைகளில் நுழைந்து ஆய்வு செய்தனர். இதனையடுத்து, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் சுமார் 25 வயதுடைய இளைஞர் முகத்தை மூடியவாறு கடைகளுக்குள் மேற்கூரையில் இருந்து இறங்கி சென்று பணத்தை திருடி செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதில் மூன்று கடைகளில் பெரியளவில் பணம் இல்லாமல் ரூ.ஐந்தாயிரத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. அந்த பணம் மற்றும் உண்டியலில் இருந்த பணம் மற்றும் பாத்திர கடையில் சுமார் 3 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அதனை திருடிச் சென்றுள்ளார்.

மேலும் இந்த கடைகளில் வைத்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் அநத பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களை வைத்து தர்மபுரி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி நகர காவல் நிலையம் மற்றும் மதிகோண்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!