அரசு தொகுப்பு வீடு கட்ட லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவர்… வீடில்லாமல் குடும்பத்துடன் அவதி… மாற்றுத்திறனாளி எடுத்த விபரீத முடிவு..!

Author: Babu Lakshmanan
29 July 2023, 5:02 pm

பாப்பிரெட்டிபட்டி அருகே அரசு தொகுப்பு வீட்டிற்கு லஞ்சம் கொடுக்க முடியாத மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட மாற்று திறனாளியின் இறப்பிற்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பழைய கொக்கரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (39). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி சுகுணா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

பழனிவேல் குடும்பத்துடன் வசிக்கும் வீடு சேதமடைந்ததால், தனக்கு மத்திய மற்றும் மாநில அரசு தொகுப்பு வீடுகளில் ஏதாவது ஒன்று திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என அப்பகுதி கொக்கரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறனிடம் மனு அளித்துள்ளார்.

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என கூறி உள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த பழனிவேலின் வீடு கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மேலும் சேதமடைந்தது. இதனால் அந்த வீட்டில் குடியிருக்க முடியாததால், அருகே உள்ள ரேசன் கடை வளாகத்தில் பழனிவேல் குடும்பத்துடன் தற்காலிகமாக தங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அருண் என்பவர் இங்கு தங்க வேண்டாம், வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால், மீண்டும் சேதமான வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, சேதமான வீட்டில் மனைவி, குழந்தைகள் தவிப்பதை பார்த்தும், மேலும் தொகுப்பு வீடுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கேட்கும் லஞ்சம் பணமும் சரி செய்து கொடுக்க முடியவில்லையே என மிகவும் மன வேதனையில் இருந்த பழனிவேல் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கோபிநாதம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற இறந்த குமரவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தற்கொலைக்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறனை கைது செய்யக்கோரி, பழனிவேல் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கோபிநாதம்பட்டி காவல்நிலையம் முன்புதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, அதன் பின்னர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை செய்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஊராட்சி மன்ற தலைவர் தொகுப்பு வீட்டிற்கு கேட்ட லஞ்சம் பணம் கொடுக்க முடியாத வேதனையில் மாற்று திறனாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Tamil actress Sana Khan updates பிரபல நடிகை மீண்டும் கர்ப்பம்..கோலிவுட்டில் பரபரப்பு..!
  • Views: - 282

    0

    0