‘சிவனே-னு தான போயிட்டு இருந்தேன்’… சாலையோரம் நடந்து சென்றவரை இடித்து தூக்கி வீசிய கார் ; பரபரப்பு வீடியோ காட்சி…!!
Author: Babu Lakshmanan6 September 2023, 8:13 pm
தருமபுரி ; எருமியாம்பட்டி அருகே அதிவேகமாக வந்த கார் சாலை ஓரம் நடந்த சென்ற நபரின் மீது மோதி தூக்கி வீசப்பட்ட பதபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எருமியாம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னாகவுண்டர் என்பவரின் மகன் பழனிச்சாமி (63) என்பவர் அரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நடந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பழனிச்சாமியின் பின்னால் அரூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு காரின் முன் பாகத்தின் மீது விழுந்த பழனிச்சாமியினை சுமந்தவாறு கார் சிறிது தூரம் சென்று பழனிச்சாமியின் வீட்டின் முன் நின்றது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் காரில் வந்த இரு நபர்களை பிடித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காரை இயக்கிய நபர் சின்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (50) என்பதும், மது போதையில் காரை இயக்கியதும் தெரியவந்தது.
மேலும் இந்த விபத்தில் கால் மற்றும் கை பகுதியில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பழனிச்சாமி மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளான பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.