பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து… மூதாட்டி உள்பட 2 பேர் உடல்கருகி பலி ; தலா ரூ.3 லட்சம் இழப்பீடாக முதலமைச்சர் அறிவிப்பு
Author: Babu Lakshmanan16 March 2023, 12:53 pm
தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உள்பட இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி பகுதியில் சரவணன் என்பதற்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது குடோனில் 4 பேர் வேலை செய்திருப்த நிலையில் கிடங்கின் உள் பகுதியில் 65 வயதுடைய பழனியம்மாள் மற்றும் 50 வயதுடைய முனியம்மாள் ஆகிய இரண்டு பேர் வேலை செய்துள்ளனர்.
2 பேர் வெளி பகுதியில் வேலை செய்த நிலையில், அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக்கொண்டு குடேனை விட்டு வேளியேற முடியாமல் சம்பவ இடத்திலேயே பழனியம்மாள், முனியம்மாள் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படுகாயங்களுடன் சிவசக்தி என்ற பெண் ஒருவர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 75 வயதுடைய சின்ன பொண்ணு என்பவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக இங்கு திருவிழா, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்த குடோனில் இருந்து பட்டாசு வெடி பொருட்கள் விநியோகம் செய்வது வழக்கம். இந்த நிலையில் தான் தீ விபத்து ஏற்பட்டு இங்கு பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது. இந்த விபத்துக்கு குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தருமபுரி அருகே பட்டாசு குடோனில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.