அரசு இடத்தில் குடியிருக்கும் மக்களை காலி செய்யக்கோரி நோட்டீஸ்… தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என பொதுமக்கள் எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
19 April 2022, 7:04 pm

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் மக்களை காலி செய்ய கோரி வீடுகளில் நோட்டிஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து அதனை அகற்ற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதனையடுத்து, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி 1வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக 28 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இடம் அரசுக்கு சொந்தமான குட்டை புறம்போக்கு என்பதால் அனுமதி பெறாமல் அனுபவத்தில் வைத்துக் கொண்டு இருப்பது தெரிய வருகிறது. ஆகையால் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள இடங்களை அகற்ற வேண்டும் எனவும், குடியிருக்கும் நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதியில் உள்ள அனைவரின் வீடுகளிலிலும் வருவாய்த்துறை சார்பில் நோட்டிஸ் ஓட்டப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது :- தாங்கள் இப்பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு அரசாங்கம் சார்பில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு பேரூராட்சி சார்பில் கான்கிரீட் சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவைகள் செய்து தரப்பட்டுள்ளன.

மேலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சார வரி உள்ளிட்டவைகளை தொடர்ந்து கட்டி கொண்டு தான் வருகிறோம். ஆகையால் நாங்கள் வாழும் இந்த பகுதி குட்டை புறம்போக்கு இடம் இல்லை. திடீரென முன்னறிப்பின்றி நோட்டீஸ் ஒட்டி எங்களை இப்பகுதியில் இருந்து காலி செய்ய கூறினால், நாங்கள் எப்படி காலி செய்ய முடியும்.

நாங்கள் எங்கே செல்வது, ஆகையால் இந்த இடத்தை நாங்கள்காலி செய்ய மாட்டோம். அதையும் மீறி எங்களை காலி செய்ய சொல்லி வற்புறுத்தினால் இப்பகுதியில் உள்ள அனைவரும் தீ குளித்து தற்கொலை செய்து கொள்வோம், என வேதனையுடன் தெரிவித்தனர்

இதற்கு உரிய தீர்வு காண தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதயில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!