தொடரும் சோகம்..! அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!
Author: Vignesh6 November 2022, 6:54 pm
தருமபுரி: தருமபுரி மருத்துவ கல்லூரியில் 2 ம் ஆண்டு படிக்கும் மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்து நாயக்கன்பட்டியை சேர்ந்த கண்ணன் பிரேமலதா தம்பதியினரின் மகன் இளம்பரிதி (20). இவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு தேர்வில் அரியர்ஸ் இருந்ததாகவும், அந்த விரக்தியில் மேலும் படிக்க இயலாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு இன்று மாலை சகமாணவர்களுடன் அவர் தங்கியிருந்த மருத்துவ கல்லூரி விடுதிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் சகமாணவர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் இவர் மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார். வெளியே சென்ற சக மாணவர்கள் அறைக்கு திரும்பி வந்த போது அறை கதவு உள்பக்கம் பூட்டியிருந்ததால் கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் கதவு திறக்கபடாததால் பலவந்தமாக கதவை தள்ளி திறந்த போது இளம்பரிதி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சகமாணவர்கள் உடனடியாக மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதனையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் பிரேதத்தை கைபற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பரிதியின் மரணம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சகமாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.