மீண்டும் மீண்டும் தடைபட்ட கோவில் கும்பாபிஷேகம்.. பாயாசத்தில் கலக்கப்பட்ட பூச்சி மருந்து… கிராம மக்கள் எடுத்த விபரீத முடிவு..!!
Author: Babu Lakshmanan27 June 2023, 2:39 pm
தர்மபுரி ; பொம்மிடி அருகே வேப்பமரத்தூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகத்தை தனிநபர் வழக்கு பதிவு செய்து தடுத்து நிறுத்தியதால் மனமுடைந்த கிராம மக்கள் 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். (வன்னியர் சமுதாயம்) கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முற்பட்டபோது கலப்புத் திருமணம் செய்த சுரேஸ் என்பவரை, கிராம நிகழ்வுகளில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதாகவும், கலப்பு திருமணம் செய்ததால் தான் இவ்வாறு செய்கின்றனர் என்று கிராமத்தை சேர்ந்த 25 பேர் PCR வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் நீதிமன்றத்தில் கிராம மக்கள் நாங்கள் கோவிலுக்கு வரும் யாரையும் தடுக்கவில்லை.
மேலும் இது அனைவருக்குமான கோவில், தனிப்பட்ட நபர் அவருடைய சொந்த வெறுப்புகளின் காரணமாக, தவறான வழக்கு தொடுத்துள்ளார் என கிராம மக்கள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில், கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர். இதற்காக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு என்னிடம் வரி வாங்கவில்லை, தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக பொம்மிடி காவல் நிலையத்தில் (கலப்பு திருமணம் செய்து 13 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு எதிராக வழக்கு நடத்தியவர்) சுரேஸ் புகார் அளித்துள்ளார். இதனால், காவல் துறையினர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது என விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் பணிகளில் ஈடுபட்டு வந்த கிராமமக்கள், தனிபட்ட ஒரு நபரால் தங்கள் கிராமத்தின் கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டதை தாங்க முடியாமல், மனம் உடைந்து கோவிலில் தயார் செய்திருந்த பாயாசத்தில், காவல் துறையினர் முன்னிலையிலே பூச்சி மருந்தை கலந்து ஒட்டுமொத்த கிராம மக்களும் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர்.
தொடர்ந்து, கிராம மக்கள் ஒன்றிணைந்து பூச்சி மருந்து கலந்த பாயாசத்தை குடிக்க முயன்றதை காவல்துறை தடுத்தனர். ஆனாலும், ராமு, கவிதா, அமுதா, அலமேலு, விஜயா, தேன்மொழி ஆகிய ஆறு பேர் குடித்துள்ளனர். இதனால், பதறிப்போன கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூச்சி மருந்து குடித்த பெண்களை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், நடைபெற்ற சம்பவம் குறித்து பொம்மிடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கோவில் கும்பாபிஷேகம் தடைபட்டதால், மனமுடைந்த கிராமமக்கள் 7 பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.