அடுத்தடுத்து தாக்கிய இடி, மின்னல்… பால் கறந்து கொண்டிருந்த பெண் உள்பட 2 பேர் பலி… பசு மாடும் உயிரிழப்பு
Author: Babu Lakshmanan15 May 2024, 10:32 am
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் நவலை ஆகிய பகுதிகளில் இடி மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் மற்றும் பசு மாடு ஒன்று உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர், நவலை, ஆர்.கோபிநாதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. நவலை பகுதியைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் முனியப்பன் தனது வீட்டின் மீது வேலை செய்து முடித்து கீழே இறங்கும் பொழுது, இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… யூடியூபர் பெலிக்ஸ் மீதும் கோவை போலீசார் நடவடிக்கை..!!
அதேபோல் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவருடைய மனைவி சித்ரா பசு மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது, தென்னை மரத்தின் மீது இடி மின்னல் தாக்கி பின்பு பசு மாட்டின் மீதும் பால் கறந்து கொண்டிருந்த சித்ரா மீதும் இடி மின்னல் விழுந்ததில், பசு மாடும், சித்ராவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இருவரின் உடலையும் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இரு வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தாலும், பசு மாடு உயிரிழந்த சம்பவத்தாலும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.