கூட்டணிக்கு ரூ.100 கோடி கேக்குறாங்க.. முன்னாள் அமைச்சர் பேச்சால் சலசலப்பு!

Author: Hariharasudhan
20 November 2024, 11:01 am

கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்த, அதிமுக ஆய்வு மற்றும் களக் குழுவினர் சார்பில், திருச்சியில் நேற்று (நவ.19) அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிமுக, தனது 53வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 53 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறோம். கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார்.

நம்முடைய கூட்டணிக்கு வர வேண்டும் என்றால், ரண வேதனையாக இருக்கிறது. யார் வந்தாலும் சும்மாவா வருகின்றனர்? ஒரு 20 சீட் கொடுங்கள், 50 கோடி கையில் கொடுங்கள் அல்லது 100 கோடி ரூபாய் கொடுங்கள் எனக் கேட்கின்றனர். ஏதோ நெல், அரிசி விற்பது போன்று பேரம் பேசுகின்றனர். நாம் எங்கே போவது? இப்போது, அதிமுகவுக்குதான் மார்க்கெட் போய்க் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியைத்தான் மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அந்தந்த கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். அப்போது ஏன் தலைவரே, ரூபாயைக் குறைத்துக் கொள்ளக்கூடாதா எனக் கேட்டால், இதை வைத்துதான் தொழில் நடத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

EDAPPADI PALANISWAMI UPSET

அந்தக் கொடுமையில் எடப்பாடி பழனிசாமி மாட்டிக்கொண்டு உள்ளார். தற்போது அவர் கூட்டணிக்குப் பேசிக் கொண்டு இருக்கிறார். எனவே, விரைவில் நல்ல செய்தி வரும். கள ஆய்வு என்பது நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதற்காகத்தான். ஆகவே, நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு கட்சிக்கு வெற்றியை தேடித் தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இப்டியே போனா எதிர்கட்சி மட்டும் தான்.. மீண்டும் அதிமுகவில் குழப்பம்!

முன்னதாக, அமைச்சர் தங்கமணியும், கட்சிக்குள்ளே கருத்து வேறுபாடு இருந்ததால் தான், தோல்வியைச் சந்தித்தோம், இப்படியே சென்றால் அதிமுக எதிர்கட்சியாக மட்டும் தான் இருக்க முடியும் எனப் பேசியிருந்தார். இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர், ஒரே மேடையில் இப்படி பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!