தென்னாப்பிரிக்காவில் திண்டுக்கல் இளைஞர் மர்ம மரணம்? குழந்தைகளுடன் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan27 May 2023, 1:22 pm
திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டியை சேர்ந்தவர் நல்லூ இவரது மகன் முத்துப்பாண்டி 38. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளன.
இவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள லிபேரியாவில் போர்வெல் வாகனம் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை உடல்நிலை சரியில்லை என்று போன் செய்துள்ளார்.
அதன் பிறகு முத்துப்பாண்டியன் மனைவி மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போர்வெல் உரிமையாளருக்கு தொடர்ந்து போன் செய்துள்ளனர்.
அவர்கள் போனை எடுக்கவில்லை என்றும் மதியம் மூன்று மணிக்கு மேல் போனை எடுத்து முத்துப்பாண்டி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர், மேலும் எதனால் உயிரிழந்தார் என்று உறவினர்கள் கேட்ட பொழுது அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றும் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதாகவும் உடலை உடனடியாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வாருங்கள் என்று உறவினர்கள் கூறிய நிலையில் முத்துப்பாண்டியன் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர முடியாது ஹைதராபாத்திற்கு முத்துப்பாண்டியன் உடலை கொண்டு வருகிறோம்.
அங்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்லி இணைப்பை துண்டித்ததாகவும், இதையடுத்து முத்துப்பாண்டியின் உடலை மீட்டுக் கொண்டு வரக்கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: என் கணவர் நன்றாக ஆரோக்கியமாக தான் இருந்தார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதாக கூறி, இறந்து விட்டதாகவும் எனக்கு தகவல் கூறினர். அவருடைய சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் .எனது கணவரின் உடலை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்