படியில் நின்று போதை ஆசாமி அட்ராசிட்டி… அரசுப் பேருந்தை நிறுத்தி தர்மஅடி கொடுத்த ஓட்டுநர், நடத்துநர் ; அதிர்ச்சி வீடியோ..!!!
Author: Babu Lakshmanan17 July 2023, 9:04 am
அரசு பேருந்தில் படியில் பயணம் செய்து வந்த குடிமகனை இருக்கையில் அமரும்படி கூறிய நடத்துனரை தகாத வார்த்தைகளில் திட்டியதால் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் பயணிகள் சரமாரியாக தாக்கி பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளத்தில் இருந்து வத்தலகுண்டு வழியாக திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, குடிமகன் ஒருவர் பேருந்தில் படியில் நின்று கொண்டு இறங்கும் பயணிகளுக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தார். இருக்கையில் அமரும்படி நடத்துனர் கூறிக் கொண்டிருந்தார். கீழே விழுந்து அடிபட்டால் நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும், அதனால் இருக்கையில் சென்று அமரும்படி கூறியுள்ளார்.
இதனை கேட்க மறுத்த குடிமகன் நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டி, கையை ஓங்கி கொண்டு அடிக்கவும் சென்றுள்ளார். இதனை கண்ட பேருந்து பயணிகள் மற்றும் பேருந்து நடத்துநர் பேருந்தை நிறுத்திவிட்டு குடிமகனை சரமாரியாக தாக்கி பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர். இருந்த போதும் நடத்துநரையும் ஓட்டுநரையும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு இறங்கிய குடிமகன், அவருடன் வந்த பெண் நீண்ட நேரமாக குடிமகனை அழைத்தும் அவருடன் செல்லாமல், அந்த பெண்ணை மட்டும் கிளம்பி செல்லும்படி வலியுறுத்தி, அதே இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார்.
இதனை கண்ட பயணிகள் நடத்துநரை பேருந்தை எடுத்து செல்லும்படி கூறியதால், உடனடியாக பேருந்து ஓட்டுநர் பேருந்தை எடுத்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு சென்று பயணிகளை இறக்கி விட்டனர். குடிமகனின் இந்த செயல் பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.