ஆட்டோ மோதிய விபத்தில் நடந்து சென்ற தலைமை ஆசிரியர் பலி ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Babu Lakshmanan12 March 2024, 9:14 am
திண்டுக்கல் ; நத்தத்தில் நடந்து சென்ற தலைமை ஆசிரியர் மீது ஆட்டோ மோதியதில் தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காட்டுவேலம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (72). இவர் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் நத்தம் அண்ணாநகரில் வசித்து வந்த இவர், காலை பால் வாங்க சென்றுள்ளார். அப்போது, யூனியன் அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்ற போது நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ஆட்டோ மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், ஆறுமுகம் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமையாசிரியர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, அருகிலேயே சாலையின் நடுவில் தீவிரமாக கட்சிக் கொடியை ஊன்றி கொண்டு இருந்த நபர்கள் மனிதாபிமானம் எங்கே சென்றது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.