டிரான்ஸ்ஃபராகி 4 மாதத்தில் வசூல் வேட்டை… மருத்துவரின் வழக்கை முடிக்க ரூ.20 லட்சம் லஞ்சம்.. சிக்கிய ED அதிகாரி!!
Author: Babu Lakshmanan1 December 2023, 1:29 pm
மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி 20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார் .
திண்டுக்கல் மருத்துவர் மீது அமலாக்கத்துறையில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கை முடிப்பதற்காக நாக்பூரில் பணிபுரிந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டு மதுரைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரி 47 வயதான அங்கீட் திவாரி மருத்துவரை அணுகியுள்ளார்.
அப்போது, அமலாக்கத்துறை வழக்கை முடிப்பதற்கு 20 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று திண்டுக்கல் மருத்துவர் லஞ்சப்பணம் கொடுப்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரியை வரச் சொன்னதாக தெரிகிறது. அமலாக்கத் துறை அதிகாரி தன்னிச்சையாக தனது வாகனத்தில் நாக்பூர் எண்டோஸ்மென்ட் டைரக்டர் என்ற போஸ்டுடன் மருத்துவரை அணுகி 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார்.
தொடர்ந்து, மருத்துவரின் புகாரின் பேரில் அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சுற்றி வளைத்து அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 லட்ச ரூபாய் பணத்துடன் திண்டுக்கல் திருச்சி சாலையில் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
தற்போது லஞ்ச ஒழிப்பு காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆய்வாளர் ரூபாவதி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரி 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், எந்த மருத்துவமனை எந்த மருத்துவர் என்பது குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அளிக்கவில்லை.