கோம்பையில் விவசாய பகுதியில் இறங்கிய கொம்பன்கள்… அலட்சியம் காட்டும் வனத்துறை… பொதுமக்களே யானைகளை விரட்டிய வீடியோ..!!
Author: Babu Lakshmanan25 June 2022, 2:13 pm
திண்டுக்கல்லில் கோம்பையில் உள்ள விவசாய பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகளை பொதுமக்களே காட்டுக்குள் விரட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ்மலை கிராமங்களான ஆடலூர், பன்றிமலை, கே. சி. பட்டி, கோம்பை, தர்மத்துப்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் உணவுக்காக அடிக்கடி ஊருக்குள் வரும், அப்போது காட்டு யானைகள் உணவுக்காக விவசாய நிலங்களை அழித்து வருவது வாடிக்கையாகி விட்டது.
இது குறித்து பலமுறை தர்மத்துப்பட்டி, கோம்பை பகுதி பொதுமக்கள் கன்னிவாடி வனச்சரகத்தில் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட கோரி பலமுறை கோரிக்கை வைத்தனர். கடந்த மாதம் கூட ஒருவரை யானை தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், யானை தாக்கியதில் பல பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.
நேற்று மாலை நேரம் கோம்பை திட்டு மேடு பகுதியில் குடியிருப்புக்கு அருகில் உள்ள விவசாய பகுதிக்குள் நான்கு, ஐந்து யானைகள் புகுந்ததால் அப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், வனத்துறை வர கால தாமதம் ஆனதால், பொதுமக்களே புகை போட்டும், அதிகமான சத்தம் எழுப்பியும் யானைகளை அடர்ந்த காட்டிற்குள் விரட்டியுள்ளனர். யானைகளை பொதுமக்கள் விரட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உடனடியாக தமிழக அரசு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஏற்கனவே டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்டாமல் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
0
0