வீட்டு வாசல் முன்பு நிறுத்தப்பட்ட பைக் தீவைத்து எரிப்பு ; இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் வீட்டில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan2 September 2022, 2:47 pm
திண்டுக்கல் : திண்டுக்கல் குமரன் திருநகரில் இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் வீட்டு வாசல் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் தீவைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் மோகன் குமார் (36). இவர் திண்டுக்கல் குமரன் திருநகரில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டிற்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பாதுகாப்பிற்கு அங்கு தங்கியுள்ளார்.
இதனிடையே, நள்ளிரவு நேரத்தில் திடீரென இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூறும் போது, “மர்ம நபர்கள் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை அச்சம் அடையச் செய்வதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளனர். அந்த மர்ம நபர்களை கண்டுபிடித்து கைது செய்யப்பட வேண்டும். அதுவரை இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல மாட்டோம், என தெரிவித்தனர்.