CM ஸ்டாலினின் இமேஜ் பயங்கரமாக பில்டப் ஆகிருச்சு.. இனி 20 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தான்… திண்டுக்கல் லியோனி பேச்சு!!
Author: Babu Lakshmanan12 January 2023, 9:59 am
பாஜகவும், அதிமுகவும் அரைகுறை கட்சிகள் என்றும், வரும் பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என திமுக தேர்தலில் வெற்றி பெறும் என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பாடியநல்லூர் மொண்டியம்மன் நகரில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு தையல் இயந்திரம் மாற்றுத்திறனாளி வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- பாரம்பரியம் எது என்பதை பதவி பிரமாணத்தின் போது நிலைநாட்டியவர் முதல்வர். ஆளுநரை பார்த்த முதல்வரின் லுக் மற்றும் சிரிப்பு பார்வையிலே அற்புதமான செய்தியை வெளிப்படுத்தியவர். எதிர்க்கட்சிக்காரர்கள் ஆளுநரை வெளியேறுமாறு சட்டசபையில் கத்தினார்கள். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கையெழுத்து போடாமல் இருந்ததால் ஆளுநரை எதிர்த்து கோசமிட்டனர்.
ஆளுநர் அவர் கையெழுத்திட்ட உரையை படிக்க கூறியபோது, உல்டா செய்து படித்ததால் அதே இடத்தில் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் உடனடியாக சட்டசபையை விட்டு வெளியேறியதை பார்த்து முதல்வர் புன்முறுவல் செய்தார். முதல்வர் சட்டசபையில் செயல்பட்ட விதம் பெரியாரின் மண்ணிலே பிஜேபியின் எந்த செயலும் எடுபடாது.
பாஜக, அதிமுக அரைகுறை கட்சி. வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என திமுக தேர்தலில் வெற்றி பெறும். எதிர்ப்பு என்று சொல்வதற்கு ஒருவர் கூட இல்லாமல் சுக்கு நூறாய் உடைந்து கொண்டிருக்கிறது.
ஓபிஎஸ், இபிஎஸ் அதிமுக ஒரு கட்சியா..? ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கி கொண்டு உள்ளனர். கட்சி நடத்தி இனி ஒரு பிரயோஜனம் இல்லை. எதிர்ப்பு என்று சொல்ல ஒருவரும் இல்லை, அதனால் 20 ஆண்டுகளுக்கு இனி தமிழகத்தை ஸ்டாலின்தான் ஆட்சி செய்வார்.
திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து பாஜகவிற்கு, அதிமுகவிற்கும் மிகப்பெரிய கோபம் வந்துள்ளது. கருப்பு சட்டை போட அருகதை இல்லாதவர்கள் இன்று கருப்பு சட்டை போட்டு சட்டசபைக்கு வருகின்றனர். சுயமரியாதை இழந்த எடப்பாடி கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிப்பதா..? அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் எடப்பாடி ஓபிஎஸ் அருகருகே அமர்ந்திருந்ததை தனது முகபாவணையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதை நகைச்சுவையாக செய்து காட்டினார்.