மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் கழுத்தறுத்து கொடூரக் கொலை : உடலை ஓடையில் வீசிச் சென்ற அதிர்ச்சி சம்பவம்!!
Author: Babu Lakshmanan14 February 2023, 9:18 am
திண்டுக்கல் அருகே முன் பகை காரணமாக இளைஞர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சீவல் சரகை சேர்ந்தவர் கருப்புச்சாமி (35) இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் – கரூர் சாலையில் உள்ள எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ஈஸ்வரியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக கருப்புச்சாமி தனது மாமனார் ஊரான எரம நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். இவருக்கும் எரம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஒரு சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று மது அருந்துவதற்காக கருப்புச்சாமி எரமநாயக்கன்பட்டி பிரிவில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது வாங்கி வந்து சந்தான வர்த்தினி ஆற்றுக்கு அருகில் உள்ள கழிவு நீர் ஓடை அருகே அமர்ந்து மது அருந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாது மர்ம நபர் கருப்புச்சாமியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்து அருகில் உள்ள கழிவு நீர் ஓடையில் கருப்புச்சாமியின் உடலை தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் டவுன் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கணேஷ், மலைச்சாமி, மற்றும் போலீசார் கருப்புச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது மோப்பநாய் ரூபி சம்பவ இடத்திலிருந்து அருகில் உள்ள சந்தன வர்த்தினி ஆறு வரைக்கு சென்று நின்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எதற்காக படுகொலை சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.