நல்லா இருக்கற ரோடு.. மீண்டும் மீண்டுமா..? ஏன் பணத்தை வீணடிக்காதீங்க… மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் திமுக கவுன்சிலர் ரகளை..!!
Author: Babu Lakshmanan3 August 2023, 6:31 pm
திண்டுக்கல் : திண்டுக்கல் ரவுண்ட் ரோடு அருகே நல்லா இருக்கும் சாலையை மீண்டும் போட்டு பணத்தை வீணடிப்பதாக திமுக மாமன்ற உறுப்பினர் முகமது சித்திக் மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் ரவுண்டு ரோடு சாலை செப் பண்ணிடும் பணிக்காக, கடந்த மாதம் திமுக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பூமி பூஜை போடப்பட்ட நிலையில், தற்போது மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் திமுக மாமன்ற உறுப்பினர் சித்திக், வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டார்.
தரமற்ற முறையில் சாலை அமைப்பதாகவும், தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலை முறைகேடாக அமைக்கப்பட்டு வருவதாகவும் ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். மேலும், ரவுண்ட் ரோடு புதூர் பகுதியில் தற்போது உள்ள பழைய சாலை எந்தவித பள்ளங்களோ, பாதிப்பு இல்லாத நிலையில் தரமாக சாலையாக உள்ளது.
இந்நிலையில் புதிதாக அமைக்கப்படும் சாலை பழைய கற்களை பெயர்த்து விட்டு பின்னர் அதில் தார் அல்லது சிமெண்ட் பால் ஊற்றி பிறகு சாலை அமைப்பது வழக்கம். இதில், எந்த ஒரு செயல்பாடுகளும் செய்யாமல் வெறும் தண்ணீரை மட்டுமே தெளித்துவிட்டு, மேலே சிமெண்ட் ஜல்லி கலவைகளை கொட்டி, சாலை அமைத்து செல்வதால் இனி வரும் காலங்களில் சாலை நிலைத்து நிற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், சாலை அமைக்கும் பணி தொடர்ந்து 10 நாட்களாக நடந்து வரும் நிலையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் எந்த ஒரு அதிகாரிகளும் ஆய்வு செய்யவில்லை என திமுக கவுன்சிலர் சித்திக் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் மாநகராட்சிக்கு சென்று ஆணையரிடம் புகார் தெரிவித்து பின்னர் சாலையை அமைக்கும்படி அறிவுறுத்தியதன் பேரில் சாலை போடும் பணி பாதியிலே நிறுத்தப்பட்டு உள்ளது.
திமுக ஆட்சியில் தரமற்ற முறையில் சாலை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக கவுன்சிலர் முகமது சித்தீக் ரகளை ஈடுபட்டு புகார் தெரிவித்திருப்பது திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.