PTR ஆடியோ விவகாரம்… திமுகவுக்கு அரசியல் ஆண்மை இருந்தால் அதற்கு தயாரா…? திண்டுக்கல் சீனிவாசன் சவால்..!!

Author: Babu Lakshmanan
2 May 2023, 4:19 pm

திண்டுக்கல் ; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட ஆடியோ தொடர்பாக நிரபராதி என்று நிரூபிக்க முடியுமா..? என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மே தின விழா பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் நாகல் நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி சீனிவாசன் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது :- தற்போது தமிழகத்தில் ஏடிஎம் கார்டு மூலமாக மது விற்பனையை அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கியிருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பெட்டி ஒன்று வைத்திருந்தார்கள். அதற்கான சாவி என்னிடம் உள்ளது. நானே திறந்து பார்ப்பேன் என ஸ்டாலின் கூறியிருந்தார். தேர்தலுக்கு முன்னால் டிவியை பார்த்தால் எங்கு பார்த்தாலும் தெரிந்தது. தற்போது அந்தப் பெட்டி எங்கு போனது, சாவி எங்கு போனது, மனுக்கள் எங்கு போனது என்பதே தெரியவில்லை. பூரம் பொய்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறியிருந்தார். தற்போது திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை 24 மணி நேரமும் நடைபெறுகிறது. இது தவிர கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகள் அனைத்தும் தமிழகத்தில் தடையில்லாமல் கிடைத்து வருகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு உள்ளதை புள்ளிவிபரங்களாக எடுத்து உரைத்துள்ளார். தற்போது முப்பதாயிரம் கோடி ஊழல் ஒரு துறையில் மட்டும் நடந்துள்ளது. இது தொடர்பாக மதுரை எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். அரசியல் ஆண்மை இருந்தால், மடியிலே கனமில்லை என்று சொல்லும் திமுக ஏன் சிபிஐ வைக்கக் கூடாது.

அரசியல் ஆண்மை இருந்தால், தெளிவு இருந்தால், எங்களைப் பார்த்து ஊழல் குற்றச்சாட்டு வைக்கும் திமுக. உண்மையிலேயே சிபிஐ வழக்கை தொடுக்க வேண்டும். நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். நீதிபதிகளாக இருக்கக்கூடிய மக்கள் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.

இரண்டு வருடத்தில் ஒரு துறையில் ஊழல் செய்ததன் மூலமாக 30,000 கோடி கொள்ளை அடித்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன். இனி மற்ற இலாக்காக்களை தோண்டிக் கொண்டிருக்கிறார்கள், என மே தின பொதுக்கூட்டத்தில் கழக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி சீனிவாசன் எழுச்சி மிகுந்த உரையை ஆற்றினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!