ஓரிரு நாட்களில் பொதுத்தேர்வு… மாணவர்கள் போராட்டம் ஒருபுறம்… ஆசிரியர்களின் குற்றச்சாட்டு மறுபுறம்.. தத்தளிக்கும் மாணவர்களின் எதிர்காலம்..?
Author: Babu Lakshmanan28 April 2022, 11:57 am
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மாணவர்கள் ஒருபுறம் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆசிரியர்கள் மறுபுறம் மாணவர்களுக்கு எதிராக முதன்மை கல்வி அலுவலரிடம் முறையிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ராமநாதபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் கோவிலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து கிராமப்புற மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
நேற்று காலை மாணவிகள் திடீரென கோவிலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அடிப்படை வசதிகள் இல்லை, ஆசிரியர்கள் மாணவிகளை தாக்குகின்றனர் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரடியாக மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்படி, மாணவிகளின் குற்றச்சாட்டை மனுக்களாகப் பெற்று உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, மாணவிகள் கலைந்து சென்றனர்.
நேற்று மாலை சுமார் ஆறு மணிக்கு மேல் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது :- பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர் இவர்களை ஒரு சில ஆசிரியர்கள் வழி நடத்தி வருகின்றனர். அவர்கள் சொல்வதை தான் இங்கு படிக்கும் மாணவிகள் கேட்கின்றனர். மேலும் உடற்கல்வி ஆசிரியர் தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறார்.
ஆகவே உடற்கல்வி ஆசிரியர் மீதும் மற்ற ஆசிரியர்கள் மீதும் மாணவிகள் மீதும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுத்தால் தான் நாங்கள் பள்ளிக்கு செல்ல முடியும். அதேபோல், மாணவிகள் எங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினாலும், நாங்கள் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. ஆகவே எங்களுக்கு உயிர் பாதுகாப்பும் இல்லை, என பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவிகள் மீதும் உடற்கல்வி ஆசிரியர் உட்பட அவருடன் உள்ள ஆசிரியர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கூறிய போது, உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் கூறினர்.
“இன்னும் நான்கு நாட்களில் முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே வைரஸ் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவ-மாணவிகள் தங்களது படிப்பை மறந்து போயிருந்த நிலையில், தற்போது தான் வைரஸ் தொற்று குறைந்து, சில மாதங்களாக பள்ளி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை மாணவ மாணவிகள் மீது திணித்து, தற்போது மாணவ, மாணவிகளின் கல்வியை பாதிக்கும் சூழ்நிலை கீழ் கொண்டு வந்துள்ளனர். ஆகவே, மாநில கல்வி அமைச்சர், மாநிலச் செயலாளர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பள்ளியில் படிக்கும் 1500க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்வி பாதிக்காமல் தேர்வு எழுத முடியும்.
இல்லையெனில், ஆசிரியர்களின் பிரச்சனையால் மாணவிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.