லிப்ட் கொடுத்தவரை தாக்கிவிட்டு பைக்கை திருட முயன்ற இளைஞர்கள் ; வாகன ஓட்டிகளுக்கு போலீசார் கொடுத்த அட்வைஸ்!!

Author: Babu Lakshmanan
23 April 2024, 8:01 pm

கொடைக்கானலில் பைக்கில் லிஃப்ட் கொடுத்தவரை கத்தியால் தலையில் தாக்கி இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மதுரையை சேர்ந்த இளைஞர்கள் மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் பெயிண்டராக பணி புரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் பெருமாள்மலை பகுதியில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனத்தில் மலைச்சாலையில் பயணித்து, தனது பணியை முடித்து விட்டு, மாலை நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம்.

மேலும் படிக்க: கோபத்தில் கெட்ட வார்த்தை வரும்… ரிப்போர்ட்டர் கேட்ட கேள்வி… இயக்குநர் ஹரியின் பதிலால் பரபரப்பு…!!!

இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் தனது பணியை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, மலைச்சாலையில் செண்பகனூர் பிரிவு அருகே மூன்று இளைஞர்கள் அவசரமாக போக வேண்டும் என்று லிப்ட் கேட்டு, வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே உள்ள நுழைவாயில் சோதனை சாவடியில் இறங்கி விடுகிறோம் என்று கூறி, இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு ஒரே பைக்கில் மொத்தம் நான்கு பேர் சென்றுள்ளனர்.

அப்போது, நுழைவாயில் சோதனை சாவடிக்கு முன்பே மூன்று இளைஞர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்து இருந்த பட்டா கத்தியை கொண்டு முனியாண்டியின் தலையில் பலமாக தாக்கி உள்ளார். உடனே சுதாரித்த முனியாண்டி இருசக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டு விட்டு சாலையில் சென்ற வாகனத்தில் தலையில் ரத்தம் வடிவதுடன் உதவி கேட்டுள்ளார்.

அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இறங்கி உதவிய போது, மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் முனியாண்டிக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டதால் அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தலையில் எட்டு தையல் போடப்பட்டுள்ளது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த இளைஞர்கள் நடந்து சென்று பெருமாள்மலை பகுதியில் இருந்து பேருந்தில் ஏறி வத்தலக்குண்டு நோக்கி சென்றுள்ளனர். இது குறித்த தகவல் கிடைக்கவே, காவல் துறையினர் கெங்குவார்பட்டி சோதனை சாவடியில் இந்த இளைஞர்களை பிடித்து, கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது, மதுரை, திடீர் நகரை சேர்ந்த சிவக்கார்த்திகேயன் (20), சங்கரேஸ்வரன் (19) மற்றும்15 வயதுள்ள சிறுவன் (10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறுவன்) என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்று இருசக்கர வாகனத்தை திருடி செல்ல திட்டமிட்டதாகவும்,15 வயதுள்ள சிறுவன் முனியாண்டியின் தலையில் தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன், சங்கரேஸ்வரன் உள்ளிட்ட இருவர் மீதும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தெரியாதவர்கள் யாரும் இது போன்று லிப்ட் கேட்டால் யாரும் தர வேண்டாம் என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?