ரஜினியின் வெறித்தனமான ரசிகர்… ஜெயிலர் படம் பார்க்க வீல் சேரில் வருகை.. உடனே ஓடிச் சென்று உதவிய ரசிகர்கள்..!!
Author: Babu Lakshmanan10 August 2023, 12:05 pm
கரூர் மாநகரில் ஜெயிலர் படத்தை காண்பதற்காக மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் வீல் சேரில் வந்தது ரஜினி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று ஜெயிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது. கரூர் மாநகரில் அமைந்துள்ள கலையரங்கம், திண்ணப்பா, அமுதா, எல்லோரா ஆகிய நான்கு திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறது.
ஜெயிலர் படம் ரிலீசாகும் திரையரங்குகள் முன்பு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், திரையரங்குகள் முன்பு ஆள் உயர பிளக்ஸ் பேனர்கள் வைத்து அதில் நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, கரூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அமுதா திரையரங்கத்திற்கு மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் வீல் சேரில் படத்தை காண்பதற்காக வந்தார். வீட்டில் இருந்து ஆட்டோவில் வந்த அவரை ரஜினி ரசிகர்கள் வீல் சேரில் அமர வைத்து தியேட்டருக்குள் அழைத்துச் சென்றனர்.
ஸ்ரீகாந்த் என்ற மாற்றுத்திறனாளியான அந்த ரசிகர் தியேட்டருக்குள் உள்ளே செல்லும்போது ஹுக்கும் என்று கூறிவிட்டு உள்ளே சென்றார். இந்த நிகழ்வு ரஜினி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.