வரும் 9ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : எம்டிசி எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2024, 9:45 pm
வரும் 9ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : எம்டிசி எச்சரிக்கை!!
போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும், பணியில் உள்ளவர்கள், ஓய்வு பெற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தன. கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த மாதம் 19-ந் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் வழங்கியது.
இது தொடர்பாக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படும் வரை வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், வரும் 9 ஆம் தேதி தொழிலாளர்கள் பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.டி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணிக்கு வராத தொழிலாளர் மீது நிலையான விதிகளின் படி சட்டப்பூர்வ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தூண்டிவிடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு பின்னர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படும்” என்று மாநகர போக்குவரத்து கழகம் எனப்படும் எம்.டி.சி தெரிவித்துள்ளது.