ரம்ஜான் தொழுகையில் தகராறு: இருதரப்பினர் மோதிக்கொள்ளும் பரபரப்பு காட்சிகள்..!!

Author: Rajesh
3 May 2022, 9:46 pm

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ரம்ஜான் தொழுகையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.

கன்னியாகுமரி முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இங்கு பள்ளிவாசலை நிர்வாகம் செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பல வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது.

இந்நிலையில் வக்புவாரியம் ஒப்புதல் பேரில் பள்ளி வாசலை நிர்வாகம் செய்து வரும் ஒரு தரப்பினர் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். இதையடுத்து இன்று மற்றொரு தரப்பினர் சார்பில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் இரு தரப்பினரையும் அழைத்து நேற்று இரவு கன்னியாகுமரி போலீஸ்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பைச் சேர்ந்த நிர்வாகிகளும் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் வெளியே இருந்த இரு தரப்பினரின் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். போலீஸ் நிலையம் முன்பு சாலையில் இருதரப்பினர் மோதி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஒரு தரப்பினர் கன்னியாகுமரி நாகர்கோவில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் காரணமாக கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!