திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி.. எப்ப தேர்தல் வந்தாலும் எடப்பாடியார்தான் முதலமைச்சர் : எஸ்பி வேலுமணி உறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2023, 2:29 pm

கோவை கோவைபுதூர் பகுதியில் சார்பில் நீர்மோர் பந்தல் துவக்க விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்று பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள் மற்றும் மோர் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அதிமுக மட்டும் தான் பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல்களை அமைத்து உதவி வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் கோவைக்கு என்றைக்கும் நல்ல பல திட்டங்களை கொடுத்தது அதிமுக தான் எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் கோவைக்கு கொண்டு வரவில்லை எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே அதிமுக கொண்டு வந்த திட்டங்களையும் தற்போதைய தமிழக அரசு வேகமாக முடிப்பதில்லை எனவும் அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

இனிமேலாவது விடியா அரசு விழித்துக்கொண்டு மக்கள் பிரச்சனைகளை பாகுபாடு பார்க்காமல் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஒட்டுமொத்தமாக திமுகவின் மீது பெரும் அதிருப்தி உள்ளதால் எப்போது தேர்தல் நடந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதே போல் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் எனவும் தற்பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைப் பற்றி தெரியாத விளம்பர முதல்வராக இருக்கிறார் எனவும் விமர்சித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ் பி வேலுமணி,இன்று தமிழகத்தில் பத்திரிகைத்துறை மிரட்டப்பட்டு வருவதாகவும் ஆளுங்கட்சிக்கு சாதகமான செய்திகளை வெளியிடுமாறு அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

கடந்த ஆட்சி காலத்தில் கோவையில் எந்தவித சாலைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் சாலை பணிகள் மட்டுமல்லாது பல்வேறு திட்டப் பணிகளை செய்து கோவையை மாற்றி அமைத்ததாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பணியும் செய்யவில்லை எனவும் ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை கூட மூடி சரி செய்யவில்லை எனவும் மீடியாவிற்காக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆளுங்கட்சியினர் பதிலளித்துவிட்டு செல்வதாகவும் விமர்சித்தார்.

கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத திட்டங்களை அதிமுக ஆட்சியின் போது செய்தது மக்களுக்கு தெரியும் எனவும் கடந்த ஆட்சியை பற்றி குறை கூறாமல் மக்களுக்கு தேவையானவற்றை ஆளுங்கட்சியினர் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!