வடமாநிலத்தவர்களுக்கு முழு பாதுகாப்பு.. அவசர உதவி எண்களும் அறிவிப்பு.. குழுக்களை அமைத்து மாவட்ட நிர்வாகம் அதிரடி..!!
Author: Babu Lakshmanan3 March 2023, 8:41 pm
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இருப்பதாகவும், வடமாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரக்கூடிய சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டு, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் திருப்பூரில் தொழில் பாதிக்கப்படுவதாக பல்வேறு தொழில் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வினீத் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் , மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள் .
அப்போது, பேசிய மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் , சமூக வலைதளங்களில் பரவுவது போல வட மாநில தொழிலாளர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் கூறினார். மேலும், அதிகமாக மூன்று வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறிய அவர், அதில் ஒரு வீடியோ திருப்பூரில் ஜனவரி மாதத்தில் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக பரவிய வீடியோ எனவும், அந்த வீடியோவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் , மற்ற இரு வீடியோக்கள் வேறு பகுதியில் நடந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் நடந்தது போல பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வட மாநில தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏடிஎஸ்பி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் வட மாநில தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் எனவும் கூறினார்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், வட மாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருப்பின் உடனடியாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்து தங்கள் புகார்களை தெரியப்படுத்தலாம் எனவும், மொழி பிரச்சனை ஏற்படாதவாறு பல்வேறு மொழிகளை பேசக்கூடிய ஐந்து தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தந்த காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே தொடர்ந்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரின் கவனத்தில் கொண்டுவர வட மாநில தொழிலாளர்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா இந்தியிலும் பேட்டி அளித்தார்.
இதேபோல, கோவை மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு, தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், வதந்தியாக பரவும் வீடியோக்களை பிறமாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.